
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அம்பிகா சரவணகுமார் ஏற்பாட்டிலும், கோவை மாவட்ட ஹாக்கி சம்மேளனத்துடன் இணைந்தும், “வீரமங்கை அக்னி 2026” என்ற பெயரில் மாவட்ட அளவிலான மகளிர் ஹாக்கி போட்டி கோவை ஆர்.எஸ்.புரம் ஹாக்கி மைதானத்தில் கடந்த இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்று தங்களது விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தின. இறுதிப்போட்டியில் கோவை கே.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி அணி 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று “வீரமங்கைகள்” என்ற பெருமையைப் பெற்றது.
வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மாண்புமிகு சம்பத்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சி தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் வடக்கு மாவட்ட மகளிரணி நிர்வாகிகளான தமிழ்ச்செல்வி, ரேவதி உள்ளிட்ட பல்வேறு கழக நிர்வாகிகள், கோவை மாவட்ட ஹாக்கி சம்மேளன நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், வீராங்கனைகள், பெற்றோர் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக வெற்றி பெற்ற வீராங்கனைகள் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
