இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த அனைத்து வட்டார தேவேந்திரகுல வேளாளர் சங்கங்கள் சார்பில் ஆப்பநாடு மறவர் சங்க நிர்வாகி குணசேகரன் மற்றும் வீரப்பெருமாள்,இசக்கி ராஜா,சவுத்ரி ஆகியோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து தலைமை ஒருங்கிணைப்பாளர் இரா.சு.அழகர்சாமி பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு சார்பில் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு 3 கோடி மதிப்பீட்டில் திருஉருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டதை எதிர்த்து ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் அதன் நிர்வாகியான குணசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தடை கோரி மனு தாக்கல் செய்தார்.மாவட்ட ஆட்சித் தலைவர் தமிழ்நாடு அரசு எங்கள் சமூக மனதிற்கு உரிய பதிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததை வரவேற்கிறோம்.தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அரசாங்கத்தின் மூலம் பல ஆண்டுகளாக கிடைக்கவில்லை. தற்போது தமிழ்நாடு அரசு இந்த மரியாதையை அளித்துள்ளது எங்கள் சமூகத்திற்கு அளப்பரிய மகிழ்ச்சி ஆகும்.தமிழ்நாடு அரசின் இத்தகைய கொள்கை முடிவை எங்கள் சமூகம் வரவேற்று கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் சாதிய நோக்கோடு தியாகி இமானுவேல் சேகரனாரை இழிவுபடுத்தும் வார்த்தைகளை சமூக வலைதளங்களில் பேசியும்,மணிமண்டபம் அமைக்க எதிர்ப்பு என்கிற பெயரில் ஒட்டுமொத்த சமூகத்தையும் இழிவு படுத்தி வரும் குணசேகரன்,வீரப்பெருமாள்,இசக்கி ராஜா,சவுத்ரி உள்ளிட்ட நபர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாடு முழுவதும் சாதிய கொலைகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.இக்கொலைகள் பெரும்பாலும் சாதியின் பெயரால் நடத்தப்படுபவை மட்டுமே ஆகும். ஆனால் காவல்துறை கொலைக்கு சில தனிப்பட்ட காரணங்களை காட்டி சாதிய கொலை செய்த கொலையாளிகளை தப்பிக்க விடுவது வருந்தக்கூடிய செயலாகும்.இது போன்ற சாதிய கொலையாளிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.மேலும் இவர்கள் அனைவருக்கும் சட்டரீதியாக தண்டனை வழங்கி சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் பரிந்துரை செய்ய வேண்டும்.தென் மாவட்டங்களில் இராமநாதபுரம் மாவட்டம் என்பது மிகவும் பதட்டமான மாவட்டமாகும்.சாதிய கொலைகள் மற்றும் சாதிய கண்ணோட்டத்துடன் சாதிய வெறியை ஊட்டும் பேச்சுக்கள் என்பதை ஆரம்பத்திலே கிள்ளி எறிய வேண்டும்.காவல்துறைக்கும்,ஆட்சி நிர்வாகத்திற்கும் இது நன்கு தெரிந்தும் அவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படாததன் விளைவாக குற்றவாளிகள் தொடர்ந்து சமூகத்தில் ஊடுருவி பல்வேறு குற்ற செயல்களை செய்து வருகின்றனர். எனவே சாதியின் பெயரால் குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.ஆப்பநாடு மறவர் சங்கம் என்பது சமூக வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது என்று கூறுகிறார்கள்.ஆனால் அதன் தற்போதைய நிர்வாகிகள் அவ்வாறு செயல்படாமல் ரவுடிகளுக்கும்,கொலையாளிகளுக்கும்,சாதிய வன் கொடுமையாளர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதும்,ஊக்குவிப்பு செய்வதுமாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய சாதிய மோதல்களை உருவாக்க திட்டம் தீட்டுகிறார்கள் என்கிற ஐயம் உள்ளது.எனவே இத்தகைய சங்க நிர்வாகிகளை தொடர் கண்காணிப்பில் தமிழ்நாடு அரசு வைக்க வேண்டும்.மேற்கண்ட எங்கள் சமூகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு மாவட்ட ஆட்சியர் மூலமாக அளிக்கப்பட்டு வரும் மனுக்களை உரிய முறையில் விசாரித்து,இராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக பதட்டம் இல்லாமல் அனைவரும் வாழ்வதற்கு உரிய சூழல் உருவாக்குவதற்கும்,சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கும் ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது ராஜசிங்கமங்கலம் திரவியம்,முதுகுளத்தூர் ஜெயகாந்தி,கண்ணன்
கடலாடி அழகர்,தமிழ் முருகன் பரமக்குடி லெசிந்தர்,பாண்டியன் ராமநாதபுரம் ராஜ்குமார்,கோபு,தொண்டி பார்த்திபன்,சத்தியேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
