திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இவ் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கீழ் 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் வசிக்கும் வகையில் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட உப்புக்காரர் தெரு பகுதியில் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டது. இக் கட்டிடங்கள் முற்றிலும் சிதிலமடைந்து உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கட்டிடத்தில் வசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை அடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்பு கட்டிடம் முற்றிலும் பழுதடைந்து அடர்ந்த காடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. அதனை அடுத்து பயன்பாட்டில் இல்லாத அலுவலர்கள் குடியிருப்பு கட்டிடம் விஷத்தந்துக்களின் இருப்பிடமாக மாறியது. அப்பகுதி மக்களின் நலன் கருதி பயன்பாட்டில் இல்லாத விஷ சந்துகளின் கூடாரமாக உள்ள பழுதடைந்த அலுவலக குடியிருப்பு கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழு சாதாரண கூட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத அலுவலக குடியிருப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒன்றிய அலுவலர்கள் வசிக்கும் விதமாக பழுதடைந்த அலுவலக குடியிருப்பு கட்டிட பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்டி தர வேண்டும் என அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வலங்கைமான் பேரூராட்சியில் தற்போது பயன்பாட்டில் இல்லாத ஊராட்சி ஒன்றிய அலுவலக குடியிருப்பு கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
