கோவை யுனிவர்சல் ரன்னர்ஸ் கிளப்பின்2ம் ஆண்டு விழா 50 நாள் ஓட்ட நிறைவு விழாஉறுப்பினர்களுக்கு மெடல், கேடயம் வழங்கி பாராட்டு

கோவை யுனிவர்சல் ரன்னர்ஸ் கிளப் சார்பாக இரண்டாம் ஆண்டு விழா மற்றும் 50 நாள் ஓட்ட நிறைவு நாள் விழா வெள்ளக்கிணர் பகுதியில் நடைபெற்றது. இதில் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்ற மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. மேலும் 50 நாள் ஓட்ட சவாலை நிறைவு செய்த உறுப்பினர்களுக்கு மெடல் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கோவை ஐ டி ஐ பகுதியில் செயல்பட்டு வருகிறது யுனிவர்சல் ரன்னர்ஸ் கிளப், இக்குழுவில் ஓட்டம் மற்றும் நடைபயிற்சி மேற்கொண்டு வரும் 100 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இக்குழு தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டியும், 50 நாள் ஓட்ட சவாலில் பங்கேற்று நிறைவு செய்தவர்களுக்கு பரிசு வழங்கும் விழா கோவை துடியலூர் அருகே வெள்ளக்கிணர் பகுதியில் நடைபெற்றது.

இதில் முதல் நிகழ்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்ற 2 கிலோ மீட்டர் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. இதனை யோகா குரு சேதுபதி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த போட்டியில் 2 வயது குழந்தை முதல் 60 வயதிற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என 70 க்கும் மேற்பட்ட குழு உறுப்பினர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்வாக இரண்டு கிலோமீட்டர் தூரத்தை ஓடி முடித்தனர். ஓடி முடித்த அனைவருக்கும் மெடல்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறுவர்கள் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது. மற்றும் சிறுவர் சிறுமியர்களின் பரதநாட்டியம், சிலம்பம், யோகா மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்திய அனைத்து சிறுவர் சிறுமிகளுக்கும் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான யுனிவர்சல் ரன்னர்ஸ் கிளப்பின் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் 50 நாள் ஓட்ட நிறைவு நாள் பரிசளிப்பு விழா தொடங்கியது. இதில் குழு உறுப்பினர் உதயகுமார் வரவேற்புரை வழங்கினார். யுனிவர்சல் ரன்னஸ் கிளப்பின் இரண்டாம் ஆண்டு அறிக்கையை உறுப்பினர் தங்கப்பாண்டியன் வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டாக்டர் முருகேசன் பேசும்போது உடலினை எப்படி வலிமையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும். நோய்கள் வராமல் உடலை பாதுகாக்க தினமும் ஓட்டம் அல்லது நடைபயிற்சி செய்வதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதேபோல் முன்னாள் மாமன்ற உறுப்பினர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது சிறிய குழுவாக ஆரம்பித்து தற்போது 100 க்கும் மேற்பட்டோர் இக்குழுவில் இணைந்து ஓட்டப்பயிற்சி மேற்கொண்டு வருவதை பாராட்டி பேசினார்.

மேலும் யோகா குரு சேதுபதி பேசும்போது யோகக் கலையை தினமும் குறைந்தது 30 நிமிடம் செய்து வந்தால் நோய்கள் இல்லாமல் நீண்ட காலம் வாழலாம் எனவும், உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் இதன் முக்கியத்துவத்தை விளக்கி பேசினர்.

தொடர்ந்து 50 நாள் ஓட்டத்தை நிறைவு செய்த மற்றும் அதிக கிலோ மீட்டர் ஓடி முதல் 3 இடங்களை பிடித்த உறுப்பினர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் மெடல்கள் மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தனர். மேலும் குழுவில் ஓட்டத்தில் பல்வேறு சாதனைகள் செய்த வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பரிசு பெற்றவர்கள் ஓட்டப் பயிற்சியால் அவர்களுக்கு ஏற்பட்ட மாற்றம் குறித்த அனுபவத்தை பகிர்ந்தனர். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த செல்பி பூத்தில் அனைவரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

50 நாள் ஓட்ட நிறைவு நிகழ்வுகளை உறுப்பினர் பாரதிராஜா தொகுத்து வழங்கினார். இவ்விழாவை உறுப்பினர் கார்த்தி ஒருங்கிணைத்திருந்தார். விழாவின் நிறைவாக உறுப்பினர் இளங்கோ நன்றி கூறினார். தொடர்ந்து அனைவருக்கும் காலை உணவாக இனிப்பு, இட்லி, வடை, பொங்கல், சப்பாத்தி உள்ளிட்ட அறுசுவை உணவு வழங்கப்பட்டது.