
தூத்துக்குடிக்கு விலை உயர்ந்த அலெக்ஸாண்டர் ஜாதிக்கல்லை (ரத்தினக்கல்) விற்பனை செய்ய வந்த வியாபாரியை பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி பறித்துச் சென்ற 7 பேர் கொண்ட குழுவை ராமநாதபுரம் மாவட்ட தனிப்படை போலீசார் விரைந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரை மாவட்டம் பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்த முனியசாமி என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக நகைகளில் ஜாதி கற்கள் பதிக்கும் வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி அன்று சிவகாசியை சேர்ந்த ஜாஹிர் என்பவரிடம் 7 கிராம் எடை கொண்ட அலெக்சாண்டர் ஜாதிக்கல் ரசீதோடு விற்பனைக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சிவகாசியை சேர்ந்த ஜாகீர் நெல்லையைச் சேர்ந்த ரவி என்பவர் அறிமுகப்படுத்தி அவரிடம் தொடர்பு கொண்டு இந்த அலெக்சாண்டர் ஜாதி கற்களை (ரத்தினக்கல்) தூத்துக்குடிக்கு விற்பனைக்கு எடுத்து வர கூறியுள்ளார்.
இதனை நம்பி ரத்தினக்கல் வியாபாரி முனியசாமி தூத்துக்குடியில் உள்ள நபர் ஒருவரிடம் இந்த கற்களை விற்பதற்காக சென்ற போது அங்கு அவரை பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி மர்ம கும்பல் அவரிடம் இருந்து விலை உயர்ந்த அலெக்சாண்டர் ஜாதிக்கல்லையும் அவரது செல்போன் மற்றும் அவர் வைத்திருந்த ரூ.15 ஆயிரத்தையும் பறித்து சென்று விட்டனர்.
இதனால் மன உளைச்சல் அடைந்த முனியசாமி உடனடியாக தூத்துக்குடி காவல் நிலையத்திற்கு ஆன்லைன் மூலமாக புகார் செய்தார்.
அதனை தொடர்ந்து அலெக்ஸாண்டர் ரத்தின கற்களின் ஆவணங்களை சேகரித்த முனியசாமி கடந்த 12-ம் தேதி இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷிடம் நேரில் சந்தித்து புகார் அளித்தார்

இதனையடுத்து விசாரணையை தொடங்கிய ராமநாதபுரம் தனிப்படை போலீசார் முனியசாமியிடம் மர்ம கும்பல் பேசிய செல்போன் எண் மற்றும் ரவி கொடுத்த தூத்துக்குடி விலாசத்தை வைத்து விசாரணையை தொடங்கினர்.
இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துசெல்வம் என்பவரை முதலில் பிடித்து போலீஸ் அவரிடம் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் அவர் ரூ.60 லட்சம் மதப்பிலான அலெக்சாண்டர் ரத்தின கல்லை முனியசாமியிடம் இருந்து பறித்து சென்றதை ஒத்துக்கொண்டு பின்னர் அவருடன் தொடர்புடைய நபர்களின் விபரங்களை தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் பி.1 போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்தேவி தலைமையில் தனிப்படை அமைத்து இளையான்குடியைச் சேர்ந்த அபுதாஹிர்,முஹம்மது அசாருதீன்,முஹம்மது நவுபால் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த முத்து செல்வம்,கனகராஜ்,கனகராஜ்,ஜோஸ் குமார்,உள்ளிட்ட 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்பிலான அலெக்சாண்டர் ஜாதிக்கல்லையும்,15 ஆயிரம் பணத்தையும் முனியசாமி செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைது செய்த 7 பேரையும் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போதும் விற்கும் போதும் கவனத்துடன் இருக்க வேண்டும், வெளி ஊரிலிருந்து நகை விற்பனை செய்ய மற்ற மாவட்டங்களுக்கு செல்லும்போது காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்து வாங்கும் நபர்கள் குறித்து விசாரித்துக் கொள்ள வேண்டும்.ராமநாதபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகளவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குற்ற சம்பவங்கள் விரைந்து கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவதாக தெரிவித்தார்
மேலும்,தொடர்ந்து இவ்வாறான குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
மேலும் இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த பி.1 போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்தேவி மற்றும் போலீசார் அனைவரையும் பாராட்டினார்.
