
கோவை அரசூர் பகுதியில் உள்ள, கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் பிரவர்த்தனா- 2026 என்னும் முதலாமாண்டு கலைப் பிரிவான, வணிகவியல் மற்றும் மேலாண்மைப் பிரிவு மாணவர்களை வரவேற்கும் விழா நடைபெற்றது. கே.பி. ஆர் கல்விக் குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி இந்நிகழ்விற்கு தலைமை வகித்துச் சிறப்பித்தார். கல்லூரியின் செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் இந்நிகழ்விற்கு வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பி. கீதா வரவேற்புரை வழங்கினார். எழுத்தாளரும் பேச்சாளருமான கலைமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டிய அறிவுச்செல்வம். மாணவர்கள் தங்களுக்கான இலக்குகளைத் தீர்மானித்து, அதற்கான திறமைகளை வளர்த்துக் கொண்டு, உயர்ந்த நிறுவனங்களுக்கு பணிக்குச் செல்வது தங்களது பெற்றோருக்கும், பயிலும் கல்விநிறுவனத்திற்கும் செய்யவிருக்கும் மிகப்பெரிய கடமையாகும் என்றார்.
இந்நிகழ்வில் புலமுதன்மையர்கள்துறைத்தலைவர்கள் போன்றோர் அறிமுகம் சறெய்யப்பட்டனர். மேலும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக சதவீதத்துடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் விளையாட்டுத் துறையில் தேசிய அளவில் முன்னிலை வகித்த 204 மாணவர்களுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகையுடன் பயிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இக்கல்லூரியைத் தெரிவு செய்ததன் நோக்கம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்தனர். நிகழ்வின் நிறைவாக வணிகவியல் துறையைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி எஸ் அபிஸ்ரீ நன்றியுரை நவின்றார். இந்நிகழ்வில் வணிகவியல், ஒருங்கிணைந்த வணிகவியல் மற்றும் மேலாண்மைப் புலங்களைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள், அலுவல் நிலைப்பணியாளர்கள் என 3400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
