
தமிழ்நாடு திருக்கோயில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம் சார்பில், தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வும் ஆலோசனை கூட்டமும் கோவை சுந்தராபுரம் பகுதியில் நடைபெற்றது.
நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் தலைவர் ஆர். கிருஷ்ணசாமி, முதலமைச்சர் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் நேர்மையான மற்றும் மக்கள் நல ஆட்சிமுறையை முன்னுதாரணமாகக் கொண்டு, புதிய முதல்வர் சிறப்பான ஆட்சியை வழங்க வேண்டும் என கூறினார்.
இதேவேளை, இறைவனின் அருளும், தமிழகத்தில் உள்ள 3000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களின் தெய்வங்களின் ஆசியும் முதலமைச்சருக்கு கிடைக்க வேண்டும் என்றும் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் புதிய அரசு சிறப்பாக செயல்பட்டு, மக்கள் நல மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதேநேரத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருக்கோயில்கள் தொடர்பாக சங்கம் பல்வேறு முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது. முன்னோர்கள் உருவாக்கிய திருக்கோயில்களுக்கு அவர்களது வாரிசுகள் மட்டுமே பரம்பரை அறங்காவலர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்றும், பரம்பரை அறங்காவலர்களை சட்டபூர்வ நிர்வாகிகளாக இந்து சமய அறநிலையத்துறை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மேலும், மாநில மற்றும் மண்டல அளவிலான திருக்கோயில் நிர்வாக மற்றும் இருப்பணி குழுக்களில் பரம்பரை அறங்காவலர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், இந்து சமய அறநிலையத்துறையின் உயர்மட்ட குழுக்களிலும் தமிழ்நாடு திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
