
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை செயல்படுகிறது. இந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) – 1, சமூக பணியாளர் – 2 என 3 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், இதில் பாதுகாப்பு அலுவலருக்கு (நிறுவனம் சாரா) ரூ.27,804, சமூக பணியாளருக்கு ரூ.18,536 மாதந்தோறும் தொகுப்பூதியம் வழங்க உள்ளதாகவும், தகுதியான நபர்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கடந்த ஜனவரி மாதம் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி இந்த பணிகளுக்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேர்முக தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் பங்கேற்ற நபர்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் அடங்கிய குழு நேர்காணல் செய்தது. இந்த நேர்காணலில் 60-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட நேர்காணலில் வெங்கடேசன், பிரியங்கா, ரஷ்யா ஆகிய 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் தங்கள் பணிகளில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்த 3 பேரும் பணியில் சேர்ந்த ஒரு மாதத்திற்கு பிறகு, இவர்களுடன் நேர்முக தேர்வில் கலந்துகொண்டு தோல்வி அடைந்த அம்மு என்ற பெண் மாவட்ட குழந்தைகள் அலகில் பணியில் சேர்ந்துள்ளார். இவர் பணியில் சேர்ந்த சம்பவம் அந்த துறையை சேர்ந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அந்த துறையில் எந்தவித காலிப்பணியிடங்களும் இல்லை. காலிப்பணியிடங்கள் இருப்பதாக எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மேலும் அவர் ஏற்கனவே நடைபெற்ற நேர்முக தேர்வில் தோல்வி அடைந்தனர். அதனால் இவர் எப்படி பணியில் சேர்ந்தார் என்பது அங்கு உள்ள அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு ஒருவர் பணியில் சேர்ந்தது அந்த துறையில் உள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் அந்த பெண் பணியில் சேர ரூ.5 லட்சத்தை ஒரு அதிகாரியிடம் லஞ்சமாக வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவசவுந்தரவல்லி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அங்கு உள்ள அதிகாரிகளின் கோரிக்கையாக உள்ளது.
