
ஒகேனக்கல் அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தில், சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகளை கடந்தும் முதல் முறையாக மூவர்ண தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பண்ணப்பட்டி கிராமம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. சுமார் 25க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மக்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இங்குள்ள பள்ளி மாணவ மாணவிகள் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைதூரம் வனப்பகுதியை கடந்து சென்று பின்பு பள்ளியை முடித்து வீடு திரும்புகின்றனர்.

இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தங்களது கிராமத்தில் முதல் முறையாக மூவர்ண தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கி சுதந்திர தின வாழ்த்துக்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகளை கடந்த நிலையில் தங்களது கிராமத்தில் முதல்முறையாக மூவர்ண தேசிய கொடியை ஏற்றியது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும், இருந்தாலும் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதுதான் வேதனை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.
