இந்திய மருந்தியல் ஆசிரியர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளையுனைடெட் மருந்தியல் கல்லூரியுடன் இணைந்து முதல் மாநிலஅளவிலான மருந்தியல் ஆசிரியர்கள் விளையாட்டுப் போட்டிகள்

இந்திய மருந்தியல் ஆசிரியர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளை, கோயம்புத்தூரில் உள்ள யுனைடெட் மருந்தியல் கல்லூரியுடன் இணைந்து, 2026ம் ஆண்டு முதல் மாநில அளவிலான மருந்தியல் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ₹1 லட்சம் மதிப்புள்ள விருதுகளையும் கோப்பைகளையும் வழங்கினர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள யுனைடெட் கல்வி நிறுவனங்களின் ஓர் அங்கமான யுனைடெட் மருந்தியல் கல்லூரியில் இந்திய மருந்தியல் ஆசிரியர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளை, யுனைடெட் மருந்தியல் கல்லூரியுடன் இணைந்து, 2026ம் ஆண்டு முதல் மாநில அளவிலான மருந்தியல் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை கல்லூரி மைதானத்தில் நடத்தியது.

சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவங்கப்பட்ட இதன் துவக்கவிழா நிகழ்ச்சியில் யுனைடெட் மருந்தியல் கல்லூரி முதல்வர் டாக்டர் அழகர் ராஜா அனைவரையும் வரவேற்றார். யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

ஏ பி டி ஐ தமிழ்நாடு கிளையின் தலைவர் டாக்டர் வி சங்கர் தொடக்க உரையாற்றினார். ஏ பி டி ஐ தமிழ்நாடு கிளையின் செயலாளர் டாக்டர் ஆர் சம்பத் குமார் சிறப்புரையாற்றினார்.

யுனைடெட் கல்வி நிறுவன நிறுவனர் மற்றும் தலைவர் பொறியாளர் சண்முகம் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இப்போட்டிகளில் பங்கேற்க உள்ள அனைத்து மருந்தியல் கல்லூரிகளுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 32 மருந்தியல் கல்லூரிகள் பங்கேற்றன. சுமார் 350 க்கும் மேற்பட்ட மருந்தியல் ஆசிரியர்கள் கிரிக்கெட், த்ரோபால், செஸ், யோகா மற்றும் வாக்கத்தான் போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை நிருபித்தனர்.

மேலும் இந்த நிகழ்வில், பங்கேற்பாளர்களிடையே நல்வாழ்வை ஊக்குவிக்கும் வகையில், சுமார் 100 மருந்தியல் ஆசிரியர்களுக்கு ஹத யோகாவும், சுமார் 200 மருந்தியல் ஆசிரியர்களுக்கு வாக்கத்தானும் இடம்பெற்றன.

கிரிக்கெட் போட்டியில் ஈரோடு பார்மா வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது, அதே நேரத்தில் ஜே கே கே எம் காலேஜ் ஆப் பார்மஸி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. மகளிர் த்ரோபால் போட்டியில் எஸ் ஆர் ஐ பி எம் எஸ் காலேஜ் ஆப் பார்சஸி அணி முதலிடத்தையும் ஈரோடு பார்மா கிராகர்ஸ் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவை யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவரான பொறியாளர் எஸ். சண்முகம் தலைமை விருந்தினராகத் தொடங்கி வைத்தார். ஏபிடிஐ தமிழ்நாடு கிளையின் துணைத் தலைவர் டாக்டர் சி எஸ் கந்தசாமி வரவேற்புரை வழங்கினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களான சென்னை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் துறைத் தலைவர் டாக்டர் டி பாபு ஆனந்த், கோயம்புத்தூர் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மோகன், ஏ பி டி ஐ தமிழ்நாடு கிளையின் அலுவலகப் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

மருந்தியல் கல்வியாளர்களிடையே தொடர்புகளை வளர்த்து, அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்திய இந்நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது. இந்திய மருந்தியல் ஆசிரியர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளை, பங்கேற்பாளர்களுக்கு ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள விருதுகளையும் கோப்பைகளையும் வழங்கி கௌரவித்தது.

இவ்விழாவில் யுனைடெட் கல்வி நிறுவன கல்லூரிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு மருந்தியல் கல்லூரி ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இறுதியில் யுனைடெட் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் பி ஆர் விஜயானந்த் நன்றி கூறினார்.

முன்னதாக இந்நிகழ்வில் பங்கேற்ற வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு யுனைடெட் கல்வி நிறுவன தேசிய மாணவர் படை மாணவர்கள் பேண்டு வாத்தியம் முழங்க சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கி விழா மேடைக்கு அழைத்து வந்தனர்.