
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 34 வது வார்டு புதுமுத்தப்பதெரு பகுதியில் 110 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின்சாரவசதி இல்லைஎனவும் மேலும் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்வதில்லை எனவும், குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு சுத்தம் செய்யப்படாமல் உள்ளதாகவும் இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும் இது தொடர்பாக வார்டு கவுன்சிலர் சுகுணாரமேஷ் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கஇல்லை எனவும் மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதிமக்கள் புகார் மனு அளித்துள்ளதாகவும், இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் இன்று திருப்பத்தூர் நகர மைய பகுதியில் திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் திடீரென அமர்ந்து 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.மேலும் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்பின் தகவல் அறிந்து சமபவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் நகர காவல் நிலைய போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக துறை சார்ந்த அதிகாரியிடம் பேசி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு காணப்பட்டது.
