பெரம்பலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவ சங்கர் பூஜை செய்தார்

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.10.44கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் இன்று (14.10.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம் 2024-2025 ஆம் ஆண்டு திட்ட நிதியின் கீழ் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் 1,200 சதுர மீட்டர் பரப்பில் 1,000 வாகனங்களை நிறுத்தும் வகையில் மேற்கூரையுடன் கூடிய இருசக்கர வாகன நிறுத்தம் கட்டும் பணி, பேருந்து நிலையத்திற்குள் மழைநீர் தேங்காத வகையில் ழமழைநீர் வடிகால் வாய்க்கால்கள், உயர்மின் கோபுரவிளக்குகள், பேவர்பிளாக் சாலை உள்ளிட்ட பணிகள் ரூ.473 லட்சம் மதிப்பில் இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
அதேபோல, தமிழ்நாடு நகர்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.570.64 இலட்சம் மதிப்பீட்டில் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் 8.357 கிலோ மீட்டர் நீளத்திற்கு தார்ச்சாலை புதுப்பிக்கும் பணியும், 7.567 கிலோ மீட்டர் நீளத்திற்கு பழுதடைந்த சிமெண்ட் சாலைகளை தார்ச்சாலைகளாக மாற்றும் பணிகளையும் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் இன்று பள்ளிவாசல் தெரு பகுதியில் தொடங்கி வைத்தார்.
பின்னர் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களின் தேவைகளை அறிந்து தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். வடகிழக்குப்பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு எந்த சிரமங்களும் இல்லாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் போதிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும், எங்கெல்லாம் சாலைகள் பழுதடைந்துள்ளதோ அங்கு தார்ச்சாலைகளை மேம்படுத்திடவும், சிமெண்ட் சாலைகளை தார்ச்சாலைகளாக மாற்றிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல மழைநீர் வடிகால்கள், கழிவு நீர் வாய்க்கால்கள தூர்வாரிடவும், மழைநீர் எங்கும் தேங்காத வகையில் நீர்வழிப்பாதைகளை தூர் வாரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், குன்னம் வட்டம், பெருமத்தூர் வடக்கு ஊராட்சி, நல்லூர் கிராமத்தைச்சேர்ந்த திருமதி பார்வதி என்பவரின் பசுமாடு கடந்த 12.10.2024 அன்று பெய்த மழையில் எதிர்பராதவிதமாக இடிதாக்கி இறந்து விட்டதால், அரசு நிவாரண நிதியல் இருந்து ரூ.37,500 வழங்குவதற்கான ஆணையினை பயனாளியிடம் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். நிவாரண நிதி பயனாளியின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்நிகழ்வின்போது, நகர்மன்றத்தலைவர் திருமதி அம்பிகா இராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் திரு.சி.இரஜேந்திரன், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திரு.ந.கிருஷ்ணமூர்த்தி, அட்மா தலைவர் திரு.வீ.ஜெகதீசன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ராஜ்குமார், திரு.துரைசாமி, நகர்மன்றத் துணைத்தலைர் திரு.ஆதவன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு.டி.சி.பாஸ்கர், நகராட்சி ஆணையர் திரு.இராமர், பெரம்பலூர் வட்டாட்சியர் திரு.சரவணன், திரு.பரமேஷ்குமார் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.